
காகித பூக்கள்
அண்ணன்களின்
சில அப்பாக்களின்
அவசர தேவைக்காய்,
அடமான பொருளாய் நாங்கள்!
ஐந்தரையடி உடலுக்கு
ஐயாயிரமே அதிகமாம்!
யாரும் மீட்கபோவதுமில்லை!
மீள்கின்ற வழியுமில்லை!
கண்ணாடி பதித்த ரவிக்கையை
அணிகின்ற போதும்
அது எங்கள்
கஷ்டங்களை காட்டுவதில்லை!
நரம்புகள் அறுந்த பின்னும்,
லயம் மாறா
இசை மீட்டும்
விறகான வீணைகள்!
பிரம்மனால்
பிழைகளுடன் எழுதப்பட்ட
கவிதைகள் நாங்கள்!
கற்று கொடுக்கும்
ஆசானுக்கே திரும்புகிறது
பிரம்பின் வலி!
எச்சில் உணவுதான்!
தினமும் புதிதாகவே
பூஜிக்கப்படுகின்றோம்!
இருட்டு பொழுதில்
திருட்டு கண்களோடு தேடும்
கண்ணியவான்களின் கைகளில்
ஒளிரும் சிவப்பு விளக்குகள்!
வடுக்கள் பல தந்த போதும்,
வரி கட்ட வேண்டா
வருமானம் இங்குண்டு!
அடுத்த வேலை (ளை) காய்,
சாலைகளின் ஓரங்களில்,
சாய்ந்து நிற்கையில்,
பசி கொண்ட கண்களோடு,
ஏக்கத்தோடு கை நீட்டும்
அறைஜான் குழந்தையிடம்,
10 ரூபாய் திணிக்கையில்
வெளிப்படும் ஆனந்த புன்னகையில்,
அவ்வப்போது மனம் வீசிக்கொள்கின்றன,
இந்த "காகித பூக்கள்"