
காத்திருந்த காதுகளில்,
கனிவாய் அந்த செய்தி
விழுந்த போது,
மீண்டும் ஒருமுறை
நான் பிறப்பெடுத்தேன்!
காண்போர் யாவரும்
என்னிடம் உன்னைப்பற்றி
என் கன்னம் தடவி
கேட்கையில்
அடிக்கடி வெட்கப்பட்டேன்!
என்னையே
தொலைத்து நிற்கும்
உனக்கான நினைவுகள்
இப்போது கனவிலும்!
உணவு, உறக்கம்,
நடை, உடை
யாவற்றிலும்
சில பல திருத்தல்கள்
உன் பொருட்டு என்னில்!
நீ கருப்போ? சிவப்போ?
உனக்கான உருவம்
எனக்கான பிரம்மாவால்
என்னுள் எழுதப்படுகிறது!
வானத்தில் மேகம்
எழுதும் ஓவியங்களாய்,
நீ என்னுள்
கால்களுதைத்து எழுதும்
கவிதைகள்
என்னை சிலிர்க்க வைக்கின்றன!
உன் உச்சி நுகரும்
நாளுக்காய்
காலம் காத்திருக்க
சொல்லும் அவகாசம்
மிக அநியாயம்!
ஆனால்..........
இம்முறை
என் காதுகளோடு
தாய்மையும் காத்திருக்கிறது!
உன் நா நரம்புகள்
மீட்டப்போகும்
"அம்மா" வார்த்தைக்காக!
No comments:
Post a Comment