Thursday, September 17, 2009

மழைக்கால அகதிகள்!




இது கதவில்லா வீடு!
களவாட யாரும்
வருவதில்லை!

வீடென்றால்...........
கம்பி வைத்து கட்டியதல்ல.
கிடைக்கும் காகிதங்களில் ஒட்டியது!

மனைவியோடான
முத்தங்களும் இங்குதான்!
மூன்று மகள்களின்
பருவ முதிர்சிகளும் இங்கேதான்!

நாங்களும்
ஓர் வகையில்,
ஜப்பானியர்கள் தாம்!

எரிகுழம்பு அவர்களை கலக்கும்!
மழைகுழம்பு எங்களை கிளப்பும்!

எங்களுக்கு
ரோடு ஆறுமாதம்!
மீதி..........?
பீதியே!

நீங்கள் நடந்து செல்ல,
முகம் சுளிக்கும்
பாதைகளில்தான்
எங்கள் பச்சிளம் குழந்தைகள்
படுத்துறங்குகின்றன!

நாங்கள்
கண்ணீரும் விடுவதில்லை!
அது கடலென பெருகி,
எங்கள் காகிதங்கள்
கப்பலாகி விடுமோ (?) என்பதால்!

கரை வேட்டி கட்டி,
கரம் குவித்து,
எங்கள் வீடு(?) தேடி,
கவிதை பாடி சென்றனர்.
"போடுங்கள் ஓட்டு!
கட்டி தருவோம் ஓர் வீடு"

ஓட்டோடு
ஓடிபோனவர்கள்தான்,
அவர்கள் வீதிவழியே
விரையும் போது
காரின் பார்வை
தவறுதலாய் கூட,
எங்கள் மீது விழவே இல்லை!

மழைக்கால
அகதிகள் நாங்கள்!
மன்றாட யாருமில்லை!


வீதி வாழ்கின்ற
நாட்டின் விதிகள் நாங்கள்!
திருத்தி எழுத எவருமில்லை!


தின கூலியாய்,
வரும் அறுபதில்,
அரை வயிற்று
சோற்றுக்கு கொஞ்சம்!
அடிக்கடி வரும்
அரசதிகாரிக்கு லஞ்சம்!
பிறகெப்படி
வீடென்ற கனவு
எங்கள் இமைகளில் கொஞ்சும்?

கர்மத்தை எண்ணி,
காரியம் நோக்கி செல்கின்றோம்!

கடந்து சென்ற கட்டிடங்களில்,
ஏசியின் சுவசிப்பில்,
ஓய்வெடுக்கும்
செல்லபிராணிகள் இரக்கமாய்
எங்களை நோக்குகையில்,
இதயத்திலிருந்து ஓர்
அழுகைக்கான வெடிப்பு
ஆயத்தமாகிறது
யாருக்கும் சொல்லாமல்!

No comments:

Post a Comment