Wednesday, September 16, 2009

என் செய்வேன் நான்?



வாரத்தின்
ஓர் "வெள்ளி" தினத்தில்,
அரைத்த மஞ்சளை அழகுற பூசி,
விரித்த சூரியனாய் முகம் மலர்ந்து,

கருவிழிகளின் புறச்சுவர்களுக்கு
கருப்பு சுண்ணம்
கொண்டு வண்ணம் அடித்து,

கரு மூங்கிலென வளர்ந்து செழித்த
கூந்தல் காட்டுக்குள்ளே,
ஒரு காலில் தவம் ரிஷிபூக்களுக்கும்
கொஞ்சம் தஞ்சமளித்து,

கவிதை பேசி காதல் செய்து
முத்தமிட்டு கொள்ளும்
கண்ணாடி வளையல்களின்
சப்தத்தோடு,

ஒரு மஞ்சள் கயிறு கொண்டு
சிறு தூளி கட்டி
மார்போடு ஆடவிட்ட
தாலிக்குழந்தைக்கு
செஞ்சாந்து பொட்டிட்டு,

கூடவே,
இருமலைஎன உயர்ந்து
பின் மடிந்து நிற்கும்
பிறை வடிட்டு நெற்றி நிலவிற்கும்
ஓர் திலகம் சேர்த்து வைத்து,

காற்று தொட்டு கருத்து போவதாய்,
கவலை கொள்ளும் வெள்ளி மெட்டிகளின்
மௌன விசும்பல்களோடு
அன்னமென நடையிட்டு வரும்
கங்கைஒத்த புனித
நங்கைகளை கண்ணுறும் போது
கல்யாண சிறகுகள்
கண்களில் முளைக்கும்!

எண்ண அலைகள் காதல் மண்ணை
தொட்டு தொட்டு நனைக்கும்!

காணும் முகங்களில் எல்லாம்
கண்ணாளன் முகம் தேடி
கண்கள் களைப்புற்று பின் இளைப்பாறும்!

மயிலிறகை கொண்டு மனதை யாரோ
மெல்ல வருடுகையில் தோன்றும்
சிலிர்ப்பை சுவாசிக்கையில்.....

எண்ண அடுக்குகளில்....
எப்போதோ தொலைந்து போன,
மறந்து போன.....
சத்தியம் ஒன்று
மெல்ல எட்டி பார்க்கிறது!

"இந்தியா என் நாடு,
இந்தியர் அனைவரும்
எனது சகோதர, சகோதரியர்"
என்று என் பள்ளி பிராத்தனையில்
நெஞ்சின் மீது கைவைதெழுதிய
உறுதி இன்று என்
கனவுகளையும் சேர்த்து புரட்டுகையில்,
என் செய்வேன் நான்?

உறுதிமொழியை உறுதியாய்
பற்றிக்கொண்டு இறுதி வரை வாழ்வதா?
இல்லை இதை மறந்து சுகித்திருக்கும்
மாந்தருக்குள் நானும் மருவிப்போவதா?

பழக்கத்தையும் பாரம்பரியத்தையும்
பெரிதாய் பறைசாற்றும்
என் நாட்டின் பண்பாடு
உடைபட்ட கண்ணாடி
சில்லுகளில் சிதறி நாடெங்கும்
எதுரொலித்து இருப்பதை
எங்ஙனம் உரைக்க?

உறுதிமொழி எழுதிய கைகளை தண்டிப்பதா?
அதை விளையாட்டென எண்ணி
மனம் புரிந்த எம் இந்திய
மக்களை மன்னிப்பதா?

கார்மேகத்தின் கருவில் ஜனித்து
கடலின் வாய் காத்திருக்கும்
சிப்பிக்குள் சூல் கொண்டு
கடவுள் கைசேரும்
நல முத்தாய்வாழ்வேனோ?
இல்லை நானும்
வெறும் மழையென கலந்து
அது ஒதுக்கும் கரைகளில் புரண்டு
கல் உப்பாய் போவேனோ?


என் செய்வேன் நான்?

No comments:

Post a Comment