Thursday, October 29, 2009

காதல்


உனக்கு பிடித்ததாய்,
நீ உரைத்த உணவை
புத்தகத்தின் துணை கொண்டு,
அம்மாவின் வழி கொண்டு,
சமைத்து பரிமாறிய பின்,
உன் கண்நோக்குகின்றேன்
பரீட்சை முடிவுக்காய்
பரிதவிக்கும் பள்ளி சிறுமியாய்...................


மௌனத்தை இழைய விட்டு,
என் ஏக்கத்தை ஏற விட்டு,
அழகாய் உண்டு முடித்து,
கை அலம்புகையில்,
பின் தொடர்ந்த
எனை பார்த்து,
கண் சிமிட்டி
புன்னகைக்கையில்,
பிழைத்து கொள்கிறது
என் காதல்!

Saturday, October 3, 2009

காந்தி ஜெயந்தி



நாட்காட்டியும்,
நாளேடுகளும்
மறவாமல் சொன்னன.
அக்டோபர் 2
அரசாங்க விடுமுறை என்று!
காகங்களின்
எச்சங்கள்
சுத்தப்படுத்தப்படும்
கூடவே
காந்தி சிலைகளும்!
கட்சி கொடிகளின்
நிழலில்
இளைப்பாறும்
காந்தி படங்கள்!
அருவா சாமிக்கும்
அவசர விடுதலை!
கருணை மனுவின்
கைங்கர்யத்தில்!
கடற்கரையும்
காந்தி பூங்காக்களும்
"களை" கட்டும்!
எச்சமான விடுமுறையின்
மிச்சத்தை கரைக்க!
சிறப்பு திரைப்படங்கள்
வண்ணமிடும்
தொலைக்காட்சிகள்
மறந்தும் காட்டுவதில்லை
மகாத்மாவை!
தினம்
நாடி செல்லும்
கடை மூடி கிடந்ததால்,
மனம் வாடிப்போன
"குடி" மகனுக்கு
கூடுதலான விலையில்
வேண்டிய மட்டும்!
வாஞ்சையோடு
வாங்கி கொண்டே
வயிறெரிய நீட்டும்
ரூபாய் நோட்டில்
புன்னகைக்கிறார் காந்தி!