Thursday, October 29, 2009

காதல்


உனக்கு பிடித்ததாய்,
நீ உரைத்த உணவை
புத்தகத்தின் துணை கொண்டு,
அம்மாவின் வழி கொண்டு,
சமைத்து பரிமாறிய பின்,
உன் கண்நோக்குகின்றேன்
பரீட்சை முடிவுக்காய்
பரிதவிக்கும் பள்ளி சிறுமியாய்...................


மௌனத்தை இழைய விட்டு,
என் ஏக்கத்தை ஏற விட்டு,
அழகாய் உண்டு முடித்து,
கை அலம்புகையில்,
பின் தொடர்ந்த
எனை பார்த்து,
கண் சிமிட்டி
புன்னகைக்கையில்,
பிழைத்து கொள்கிறது
என் காதல்!

Saturday, October 3, 2009

காந்தி ஜெயந்தி



நாட்காட்டியும்,
நாளேடுகளும்
மறவாமல் சொன்னன.
அக்டோபர் 2
அரசாங்க விடுமுறை என்று!
காகங்களின்
எச்சங்கள்
சுத்தப்படுத்தப்படும்
கூடவே
காந்தி சிலைகளும்!
கட்சி கொடிகளின்
நிழலில்
இளைப்பாறும்
காந்தி படங்கள்!
அருவா சாமிக்கும்
அவசர விடுதலை!
கருணை மனுவின்
கைங்கர்யத்தில்!
கடற்கரையும்
காந்தி பூங்காக்களும்
"களை" கட்டும்!
எச்சமான விடுமுறையின்
மிச்சத்தை கரைக்க!
சிறப்பு திரைப்படங்கள்
வண்ணமிடும்
தொலைக்காட்சிகள்
மறந்தும் காட்டுவதில்லை
மகாத்மாவை!
தினம்
நாடி செல்லும்
கடை மூடி கிடந்ததால்,
மனம் வாடிப்போன
"குடி" மகனுக்கு
கூடுதலான விலையில்
வேண்டிய மட்டும்!
வாஞ்சையோடு
வாங்கி கொண்டே
வயிறெரிய நீட்டும்
ரூபாய் நோட்டில்
புன்னகைக்கிறார் காந்தி!

Sunday, September 20, 2009

இது நிழல் சிந்தும் கண்ணீர்!




மிகச்சரியாய்
4 மணிக்கு
கண்ணி வைத்து
அடிக்கிறது கடிகார முள்!

தூக்கத்தின் மிச்சத்தை
துச்சமென மிதித்து
உதறி எழுகின்றன கண்கள்!


பெரும்பாலும்
காலைக்கடன்கள்
காப்பி போடுவதிலும்,
கோலம் போடுவதிலுமே
மறந்து போகும்!


அழுகின்ற குழந்தையின்
ஹார்லிக்ஸ் முதல்
அறுபது வயது
மாமாவின் iyodex வரை
எல்லாம் பழக்கப்பட்ட
வழக்கங்கள் தான்!


அரைகுறை உணவு,
அலுவலக அவசரம்,
அதிகாரியின் திட்டு,
அனைத்தும் மறத்து போகும்,
மகனின் matriculation
பீஸை நினைக்கும் போது!


இடைவேளையில்,
கொஞ்சம் முத்தங்கள்,
பல அழுகைகள்,
சில ஆறுதல்கள்!


இருதயம் கூட
விட்டு விட்டு துடிக்கும்!
இந்த பெண் வாழ்வு மட்டுமே
சுடும் உலை
போலகொதிக்கும்!


இருப்பினும்,
சேவல் கூவி
விடியப்போகும்
மறுநாளுக்காக,
கண்கள்
காத்திருக்க தொடங்கும்!

இது ஒரு பிரம்பின் கனவு



மாணவதோழனே!
நீ நினைத்தால்எட்டு
திக்கும்தொட்டு விடும் தூரம்தான்!
கருத்தோடு நீ படிக்க

காமராஜர் தந்தகல்வி இது.
பருவத்தே பயிர் செய்து
பகலவனாய் எழுந்து வா!

கவனமாய் நீபடித்தால்................
கரும்பலகையும்
உன்கைஎழுத்து படக்காத்திருக்கும்!

சிப்பிக்குள் சிறைப்படும்
மழைத்துளி மணி முத்தாவது
சிப்பியின் சிரமத்தால்தான்.


நீ...........நல முத்தாவதும்
கல் உப்பாவதும்
உன் கையில்தான்!

தீபமும் தீபந்தமும் எழுவது
தீக்குச்சியின் உரசலில் தான்.
நீ....தீபமாய் ஒளிரவே
நாங்கள் தீக்குச்சிகளாகின்றோம்!


பாதத்தை கீறும்
பரல்களுக்கு பயந்து
பயணங்கள் நிற்பதில்லை.


தோல்விகளால்
துவண்ட சோதனைகள்
சாதனைகளாவதில்லை!


நீ சாதிக்கு பயந்தவனாக அல்ல.
சாதிக்க பிறந்தவனாயிறு!


இளைப்பாராத எரும்பாயிறு.
இமயமும்எட்டடிதான்!

உன் கைஎழுத்தை கண்டித்த
எங்கள் கூட்டத்தை
உன் ஒரு கைஎழுத்திர்க்காக
காத்திருக்க வையடா.


கண்ணநீர் மல்க கூறுகின்றோம்.
காத்திருக்கும் காலமும்
கனப்போழுதாகுமடா
கற்றுக்கொடுத்த கைகளுக்கு!

ஓசை இல்லாத ஓலங்கள்


கூடு கட்ட மைனாக்கள் இல்லை,
பிஞ்சு குரலில் கொஞ்சி பேசும் கிளிக்கூட்டம் இங்கில்லை,
சின்னப்பழம் கொறிக்கும் சிட்டுக்குருவிகளும் இல்லை,
மழையில் மகிழ்ந்ததுமில்லை,வெயிலில் காய்ந்ததுமில்லை,
இளைப்பாற இங்கே எவருமில்லை,
கருப்பையில் கனிகளை சுமந்ததுமில்லை,
காற்றை எப்போதும் பிரசவித்ததுமில்லை,
இருந்தும்,எங்கள் விழி ஓரங்களில் ஈரமில்லை.
உங்கள் கலைக்காய், எங்கள் காலம் கழிந்து கொண்டிருக்கிறது.
"போன்சாய்" என்னும் பெயரோடு!